search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி மாமூல் வசூல்"

    தீபாவளி பண்டிகை யையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து கரூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கரூர்:

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகை யையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கரூர் சணபிரட்டி தொழிற்பேட்டை வளாகத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இதனையொட்டியவாறே டாஸ்மாக் குடோன் செயல்படுகிறது. இங்கிருந்து தான் கரூர் மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளுக்கும் விற்பனைக்காக, மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி குடோனில் இருப்பில் உள்ள மது வகைகளை விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று இரவு முதல் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 

    இந்த நிலையில் திடீரென அங்கு சென்ற, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி உள்ளிட்ட போலீசார், டாஸ்மாக் குடோனுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தொழிற்பேட்டையின் முன்புற கதவினை போலீசார் இழுத்து பூட்டினர். சரக்கு வாகனங்களில் மதுபாட்டில்கள் ஏற்றும் பணியும் நிறுத்தப்பட்டது.

    தீபாவளி பண்டிகையையொட்டி மதுவகைகள் ஏதேனும் பதுக்கப்பட்டு ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் விற்கப்படுகிறதா?, கணக்கில் வராத பணம் ஏதும் புழக்கத்தில் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் துருவி துருவி போலீசார் விசாரித்தனர். இரவு நீண்ட நேரமாக நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து குடோன் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் போலீசார் மீது புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 107 பட்டாசு பெட்டிகள், ஆண்களுக்கான பேண்ட், சர்ட் 38 ஜோடிகள், பெண்களுக்கான 6 சுடிதார்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

    விசாரணையில் இந்த பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோரையும், இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலாஜி உள்பட 4 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது?, யாரிடமாவது வாங்கி வைத்தனரா? என்றும் பட்டாசு பெட்டிகள், புதிய துணி மணிகளை தீபாவளிக்காக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்துள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தமாக விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    ×